நறுமணப் பொருள் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்! கோவை வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு. மஞ்சள், ஏலக்காய், மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை மானிய உதவி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தின் வாயிலாக இந்த உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நறுமணப் பொருட்கள் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.